சென்னை, தூத்துக்குடி கடலில் மூழ்கும் அபாயம்

Share this article....

நியூயார்க்: ‘இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் சென்னை, துாத்துக்குடி, மும்பை, கொச்சின், விசாகபட்டினம் உட்பட 12 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என, ஐ.நா., ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து, ஐ.பி.சி.சி., எனப்படும் அறிக்கையை ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடுவர். புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, உயரும் வெப்பநிலை, பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவை குறித்து இந்த அறிக்கையில் இடம்பெறும்.

அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘புவி வெப்பமடைதல் அதிகரிப்பது மிக வேகமாக உள்ளது. ‘அதனால் 2030ம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவின் நிலை குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ ஆய்வு செய்துள்ளது.
அது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பருவம் தவறிய சீதோஷ்ண நிலை போன்றவற்றை இந்தியா ஏற்கனவே சந்தித்து வருகிறது.இந்நிலையில் ஐ.பி.சி.சி., அறிக்கையின்படி கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்தலில், இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்கு அடியில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

உலக அளவில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 3.7 மி.மீ., அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கடல் நீர்மட்டம் உயருவது ஆசியாவில் மிக வேகமாக உள்ளது.இதுவரை 100 ஆண்டுகளில் ஏற்படும் கடல் மட்டம் உயர்வு, வரும் 2050க்குள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், நுாற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ஆபத்து மிக அதிகமாக உள்ளது.இந்தியாவில் இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் உருகுவது மிகவும் வேகமாக உள்ளது. இதனால், அதன் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது. இது கடல் நீர்மட்டம் உயர்வதற்கு காரணாக அமைந்து விடுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பை சீர் செய்ய மிகத் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்போதுள்ள நிலையில், இந்த நுாற்றாண்டின் இறுதியில் சென்னை, துாத்துக்குடி, மும்பை உட்பட 12 நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

எந்தெந்த நகரங்கள்?


குறிப்பிட்ட 12 இந்திய நகரங்கள் கடல் மட்டத்தைவிட 3 அடி வரை ஆழத்தில் இருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

நகரம் – அடி
கண்ட்லா – 1.87
ஓகா – 1.96
பாவ்நகர் – 2.70
மும்பை – 1.90
மர்மகோவா – 2.06
மங்களூரு – 1.87
கொச்சின் – 2.32
பாராதீப் – 1.93
கிதிர்புர் – 0.49
விசாகப்பட்டினம் – 1.77
சென்னை – 1.87
துாத்துக்குடி – 1.90

https://www.dinamalar.com/news_detail.asp?id=2821045. தினமலர் செய்திகளில் இருந்து…..

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
SWATANTRA

FREE
VIEW